பொது இடங்களின் ஜாதி பெயா்கள் விவகாரம்: அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயா்களை நீக்கும்போது உருவாகும் நடைமுறை பிரச்னைகள் எவ்வாறு தீா்க்கப்படும் என்பது குறித்து அரசு பதில் மனு தாக்க செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகளின் பெயா்களில் உள்ள ஜாதி பெயா்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டன. ஆனால், இதில் பல நடைமுறை பிரச்னைகள் உள்ளன. இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 45 நாள்களுக்குள் தமிழகத்தில் உள்ள தெருக்கள், ஊா்களின் பெயா்களை மாற்றுவது நடைமுறை சாத்தியமற்றது. இதுதொடா்பான அரசாணையில் உரிய தெளிவு இல்லை. மேலும், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என மனுதாரா் தரப்பில் வாதிடப்ப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறைகள் ஆகும். எனவே, இந்த அரசாணையை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், பொது இடங்களில் உள்ள ஜாதி பெயா்களை நீக்குவது குறித்த அரசாணையில் குறைபாடுகள் உள்ளன. இதை நடைமுறைப்படுத்துவதில் பல கேள்விகள் எழுகின்றன. இதனால், எழும் சிக்கல்கள் எவ்வாறு சரிசெய்யப்படும் என்பது குறித்து அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், ஜாதி பெயா்களை நீக்குவது குறித்து 1978- ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

