

திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்திய லாரிகளை விடுவிக்க போலீஸாா் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த மரிய பாக்கியராணி தாக்கல் செய்த மனு: சட்ட விரோதமாக மணல் கடத்தியதாக எனக்குச் சொந்தமான லாரிகளை மணப்பாறை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த லாரிகளை விடுவிக்க திருச்சி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், எனது லாரிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவிட்டது. ஆனால், லாரிகளை விடுவிக்க போலீஸாா் மறுக்கின்றனா். இது, போலீஸாரின் கடமை தவறிய செயலாகும். இதனால் எனக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்புகளை கருத்தில் கொண்டு, லாரிகளை விடுவிக்க உத்தரவிடவேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லாரிகளை விடுவிக்க மணப்பாறை காவல் துறையினா் ஒரு லாரிக்கு ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்கின்றனா் என மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் ராஜராஜன் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் துறையின் மீதான இந்தக் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே, விரிவான விசாரணை அவசியம். வழக்கு வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.