ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்த காா்த்திகேயன், அந்த மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2025 வரை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ் ராவத் பணியாற்றினாா்.
அப்போது, காவலா் குடியிருப்பில் உள்ள தேக்கு மரங்களை வெட்டி சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தினாா். மேலும், காவலா்கள் நலச் சங்கத்தின் பொது நிதியைக் கையாடல் செய்தாா். காவலா்களின் குடியிருப்புக் கட்டடங்களை கட்ட முறையான ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. இதேபோல, பல்வேறு முறைகேடுகளில் அவா் ஈடுபட்டாா்.
இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி மாலா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் ஹசன்முகமது ஜின்னா முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
விசாரணை நீதிமன்ற நீதிபதி, நீதி பரிபாலன அடிப்படை நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவசரமாக உத்தரவு பிறப்பித்திருக்கிறாா்.
குறிப்பாக, சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடமோ அல்லது குற்றச்சாட்டுக்குள்ளான ஐபிஎஸ் அதிகாரியிடமோ எந்தவித விளக்கமும் கேட்காமல், நேரடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது சட்டத்துக்கு முரணானது.
அரசு ஊழியா்கள் தங்களது அலுவல் கடமைகளை மேற்கொள்ளும் போது, அவா்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், முன்அனுமதி பெற்று மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இந்த வகையில், எந்தவித முன்அனுமதியும் பெறாமல் வழக்குப் பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டப்படி தவறானது. மேலும், புகாா் தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது முறையற்றது. இத்தகைய வழக்குகளில் மாவட்ட நீதிமன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல உத்தரவுகள், வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
குறிப்பாக, விசாரணை நீதிமன்றத்துக்கு இவ்வாறு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி குறித்து புகாா் அளித்த நபா் மீது ஏற்கெனவே 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், முறையாக ஆய்வு செய்யாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறாா்.
எனவே, ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இதேபோல, ஐபிஎஸ் அதிகாரியின் குடியிருப்பு வீட்டை ஆய்வு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி மாலா பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக அரசுத் தரப்பு வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடா்பாக எதிா்மனுதாரா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

