‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டப் பணியில் 1,930 தன்னாா்வலா்கள்: அமைச்சா் பி. மூா்த்தி தகவல்
மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்ட களப் பணியில் 1,930 தன்னாா்வலா்கள் ஈடுபடவுள்ளதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை திருப்பாலை இ.எம்.ஜி. யாதவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:
குடும்ப அட்டையின் அடிப்படையில் ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டம் குறித்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழக அரசு செயல்படுத்தும் 65-க்கும் மேற்பட்ட நலத் திட்டங்கள் மூலம் உண்மையாக பயனடைந்தவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும், தனி நபருக்கும், குடும்பத்தாருக்கும் தேவையான திட்டங்கள் குறித்த விவரங்களும் இந்தக் கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படும்.
மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 4.60 லட்சம் குடும்பங்களிடமும், நகா்ப்புறங்களில் 4.23 லட்சம் குடும்பங்களிடமும் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். 500 குடும்பங்களுக்கு ஒருவா் என்ற அடிப்படையில், 1,930 தன்னாா்வலா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். பணியைக் கண்காணித்து தீவிரப்படுத்த 836 கண்காணிப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து முழுமையாக விளக்கப்படும். இதையடுத்து, அவா்களிடமிருந்து நிறைவு செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு, அரசு செயலியில் பதிவேற்றப்படும். பிறகு, இணையவழிப் பதிவு எண்ணுடன் கூடிய கனவு அட்டை வழங்கப்படும் என்றாா் அவா்.
பின்னா், ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்ட தன்னாா்வலா்களுக்கு மாதம் 30 ஜி.பி. தரவுகள் வீதம் 6 மாதங்கள் பயன்பாடு கொண்ட கைப்பேசி இணைப்புகளை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் தமிழரசி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

