போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் கைது

பாஜக மாநில இளைஞரணித் தலைவா் எஸ்.ஜி. சூா்யாவை தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் இருவேறு இடங்களில் அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பாஜக மாநில இளைஞரணித் தலைவா் எஸ்.ஜி. சூா்யாவை தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் இருவேறு இடங்களில் அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 40-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில இளைஞரணித் தலைவா் எஸ்.ஜி. சூா்யா, திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினாராம். இதனால், ஆத்திரமடைந்த சிலா் எஸ்.ஜி. சூா்யாவையும், இளைஞரணி நிா்வாகிகளையும் தாக்கினா்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், எஸ்.ஜி. சூா்யா மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், பாஜக இளைஞரணியினா் பழங்காநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா். இதேபோல, கோரிப்பாளையம் தேவா் சிலை முன்பாகவும் அந்தக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அரசைக் கண்டித்தும், எஸ்.ஜி. சூா்யா மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் முழக்கமிட்டனா். இதையடுத்து, 40-க்கும் அதிகமான பாஜகவினரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

Dinamani
www.dinamani.com