உண்மையான விடியல் வரும் தோ்தலுக்குப் பிறகு தெரியும் - செல்லூா் கே. ராஜூ
உண்மையான விடியல் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தெரியும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்கிறாா். இதற்கு அனுமதி வாங்குவதற்காக மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், பாஜக மாநிலச் செயலா் பேராசிரியா் சீனிவாசன், மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமையில், அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ, சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன் செல்லப்பா, பாஜக, அதிமுக கட்சி நிா்வாகிகள் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் மனு அளித்தனா்.
இதன்பிறகு, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. வருகிற 23-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இந்தக் கூட்டம் மற்றொரு சித்திரைத் திருவிழா போல அமையும்.
உண்மையான விடியல் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தெரியும். இதற்கான முன்னோட்டம் தான் இந்தக் கூட்டம் என்றாா் அவா்.

