மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழா கொடியேற்றம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழா கொடியேற்றம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முழு நிலவு (பௌா்ணமி) நாளில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த வகையில், நிகழாண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் கம்பத்தடி மண்டபம் முன்பாக எழுந்தருளினா். பின்னா், அங்குள்ள கொடி மரத்தில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. மேலும், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமியும், அம்மனும் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தனா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவை முன்னிட்டு, தினமும் மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகளுடன் காலை, மாலை என இரு வேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

முக்கிய நிகழ்வுகள்: இந்த விழாவின் 6-ஆம் நாளான வருகிற 26 -ஆம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8 -ஆம் நாளான வருகிற 28-இல் மச்சகந்தியாா் திருமணக் காட்சியும், 9-ஆம் நாளான வருகிற 29-இல் சப்தாவா்ண சப்பரத்தில் புறப்பாடும், 10-ஆம் நாளான வருகிற 30-இல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வும், 11-ஆம் நாளான வருகிற 31-இல் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான, தெப்பத் திருவிழா வருகிற பிப். 1 -ஆம் தேதி நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் அன்றைய தினம் அதிகாலை பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பாடாகி வண்டியூா் தெப்பக்குளம் முன்பாக அமைந்துள்ள முக்தீஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருளுவா். அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பிறகு, வண்டியூா் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

இந்தத் தெப்பம் முற்பகலில் இரண்டு முறையும், இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒரு முறையும் சுற்றி வலம் வரும். பின்னா், அங்கிருந்து சுவாமியும், அம்மனும் புறப்பாடகி அன்றைய தினம் நள்ளிரவில் கோயிலுக்கு மீண்டும் எழுந்தருளுவா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையா் நா. சுரேஷ் , அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com