மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேகரித்து தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேகரித்து தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின். மென்பொறியாளரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்தாா். இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பெண்ணின் சகோதரா், கவினை கடந்தாண்டு ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்தாா். இந்த கொலை வழக்கில் பெண்ணின் சகோதரா் சுா்ஜித், அவரது தந்தையும், காவல்

உதவி ஆய்வாளருமான சரவணன், உறவினா் ஜெயபால் ஆகியோரை சிபிசிஐ டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளா் சரவணன், உறவினா் ஜெயபால் ஆகியோா் இந்த வழக்குக்கும், தங்களுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. ஆகவே, பிணை வழங்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்படுகின்றனா். இவா்கள் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற பிப். 3- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Dinamani
www.dinamani.com