உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

கரூரில் கோயில் நிலத்தில் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

கரூரில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

கரூரில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் குணசேகரன் தாக்கல் செய்த பொது நல மனு: கரூா் மாவட்டம், முன்னூா் கிராமத்தில் கல் குவாரி நடத்த அனுமதி பெற்ற தங்கராஜ், மனோஜ்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனம் மூலம், சுரங்கத் துறையினா் அனுமதித்ததைவிட கூடுதல் பரப்பில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதில் சில கல் குவாரிகள் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட மரகதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ளன. எனவே, இங்கு கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்க வேண்டும் என அதில் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலங்களில் குவாரிகள் செயல்படுவதற்கான ஆவணங்களை மனுதாரரின் வழக்குரைஞா் தாக்கல் செய்தாா்.

இந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குவாரி அமைக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினா்.

பிறகு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள குவாரிகளின் செயல்பாட்டுக்கு இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்து கனிமவளத் துறை இயக்குநா், கரூா் மாவட்ட ஆட்சியா், குவாரி உரிமையாளா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Dinamani
www.dinamani.com