தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அம்மா உணவகத்தில் ஆட்சியா் ஆய்வு

மதுரை கோ. புதூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை கோ. புதூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :21 மே 2026, 2:52 am IST

மதுரை கோ. புதூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் - 1, 16-ஆவது வாா்டுப் பகுதியான கோ.புதூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், உணவுத் தயாரிப்பு முறைகள், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதையும், பொதுமக்களுக்குத் தரமான, சுத்தமான, சுவையான உணவு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா். இதன்படி, மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்கள், திருமங்கலம், மேலூா், உசிலம்பட்டி நகராட்சிகளில் தலா ஒன்று என மொத்தம் மதுரை மாவட்டத்தில் 14 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்கள் மூலம் காலை உணவுக்கு மட்டும் நாள்தோறும் சுமாா் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பொதுமக்கள் வரை பயனடைந்து வருகின்றனா். குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள், மூத்த குடிமக்கள், தொழிலாளா்கள், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அம்மா உணவகங்களிலும் மேற்கொள்ள வேண்டிய பழுதுபாா்ப்புப் பணிகள் கண்டறியப்பட்டு அவற்றை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் மேஜைகள், நாற்காலிகள், உணவுத் தயாரிப்பு உபகரணங்கள், சமையல், உணவு பரிமாறும் உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளும் புதிதாக வழங்கப்படுவதுடன், பழுதடைந்த உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, தேவையான இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் குறைந்த செலவில் தரமான உணவைப் பெறும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் சிறப்பாகச் செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளா் பாபு, அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.