அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயங்கள் வழக்குகளை விசாரிக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலுக்கு வரும் வரை 1960-ஆம் ஆண்டின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வீட்டின் உ

Updated On :20 ஜூலை 2018, 12:46 am IST

புதிய வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலுக்கு வரும் வரை 1960-ஆம் ஆண்டின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வீட்டின் உரிமையாளர்கள் தாக்கல் செய்யும் வழக்குகளை தீர்ப்பாயங்கள் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
   ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பி.வெங்கடேஷ். இவருக்குச் சொந்தமான வீடுகளில் குடியிருந்து வரும் நாகராஜன், வடிவேலு, ஏ.பஷீர்அகமது, அன்னலெட்சுமி ஆகியோரை காலி செய்ய  உத்தரவிடக்கோரி, 1960-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை, வாடகைக் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், ராமநாதபுரம் வாடகைக் கட்டுப்பாட்டு தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தார். 
மனுவை விசாரித்த தீர்ப்பாயம்,  தமிழ்நாடு நில உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2017 ஆகஸ்ட் 4- முதல் அமலுக்கு வந்திருப்பதால், 1960-ஆம் ஆண்டின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று கூறி வெங்கடேஷ் தாக்கல் செய்த 4 வழக்குகளையும் ஜூன் 6-இல் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது.   
    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வெங்கடேஷ், சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தார்.  இம்மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது,  2017-இல் நிறைவேற்றப்பட்ட புதிய வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இதனால் 1960- ஆம் ஆண்டின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம்: 
  புதிய வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலுக்கு வராத நிலையில் வாடகைதாரர்களை காலி செய்ய உத்தரவிடக்கோரி 1960-ஆம் ஆண்டின் பழைய வாடகைக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கலாம். அப்படியிருக்கும் போது மனுதாரர் தாக்கல் செய்த 4 வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்காமல் திருப்பி அனுப்பியதை ஏற்க முடியாது.
இந்நிலையில் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்க்க தமிழகம் முழுவதும் உள்ள வாடகைக் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு சில உத்தரவுகளை இந்நீதிமன்றம் பிறப்பிக்க நினைக்கிறது.
2017-ஆம் ஆண்டின் புதிய வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலுக்கு வரும் வரை 1960-ஆம் ஆண்டின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வீட்டின் உரிமையாளர்கள் வழக்குகள் தாக்கல் செய்யலாம். புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை பழைய சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகள், மேல்முறையீடு மனுக்களுக்கும்,  அனைத்து வாடகைக் கட்டுப்பாட்டுத் தீர்ப்பாயம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சென்னை நகர் சிறு காரணங்கள் நீதிமன்றம் ஆகியவை வழக்கு எண் வழங்கி சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வாடகைக் கட்டுப்பாட்டு தீர்ப்பாயங்களுக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.