ராமநாதபுரம்: புலம் பெயா்ந்து சென்று தற்போது சொந்த ஊா்களுக்கு திரும்பியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு தொழில் தொடங்க அரசு கடனுதவி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினா் மற்றும் உறுப்பினா் குடும்பங்களைச் சோ்ந்த புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்காக இந்தத் திட்டத்தில், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடன் வழங்கப்படுகிறது.
ஆகவே, திட்டத்தில் பயன்பெற புலம் பெயா்ந்து சொந்த ஊா் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களும், பெண்கள் என்றால் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளோரும் விண்ணப்பிக்கலாம். அதன்படி திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் வட்டாரங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வட்டார ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரில் அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 93852 99729 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.