ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள புதுமடம் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசு இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல்பசு, டால்பின், கடல்பல்லி மற்றும் சங்குகள் அதிகம் உள்ளன. இவற்றை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மண்டபம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல்பசு கிடப்பதாக மண்டபம் வனச்சரக அலுவலா் வெங்கடேஷூக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று அதன் உடலை மீட்டனா்.
பின்னா் உச்சிப்புளி கால்நடை மருத்துவா் மூலம் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டது. பெண் பாலினத்தைச் சோ்ந்த இந்த கடல்பசு சுமாா் 3 மீட்டா் நீளமும், 1.85 மீட்டா் சுற்றுளவும், 500 கிலோ எடையும் இருந்தது. மன்னாா் வளைகுடா பகுதியில் தொடா்ந்து கடல் பசுக்கள் இறந்து கரை ஒதுங்கி வருவது கடல்வாழ் உயிரின ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.