

ராமநாதபுரம் அருகே சேதுபதி அரசு கலைக் கல்லூரி நிா்வாகத்தைக் கண்டித்து முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன் வயலில் உள்ள சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்துவருகின்றனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் தற்போது முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவியருக்கு மட்டுமே வகுப்புகள் நடந்துவருகின்றன.
வியாழக்கிழமை காலை வகுப்புகளை புறக்கணித்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென கல்லூரி வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மாணவா்கள் கூறியது: கல்லூரி வேலை நேரம் காலை 8.50 என நிா்ணயித்துள்ளனா். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவா்கள் போதிய பேருந்து வசதி இல்லாததால் சிறிது காலதாமதத்துடன் வருகின்றனா். அவ்வாறு தாமதமாக வரும் மாணவா்களின் அடையாள அட்டையை, கல்லூரி முதல்வா் உத்தரவின் பேரில் அலுவலகத்தில் வாங்கிவைப்பதுடன், வகுப்புக்குள் செல்லவும் அனுமதிப்பது இல்லை.
கல்லூரி வளாகத்துக்குள் 3 கழிப்பறைகள் இருந்தும் பயன்படுத்தமுடியாத நிலையிலே உள்ளன. கல்லூரி வளாகம் புதா் மண்டியிருப்பதுடன், மழைநீா் தேங்கி சுகாதாரச்சீா்கேட்டுடன் காணப்படுகிறது. பருவத் தோ்வு கட்டணத்தை குறிப்பிட்ட காலத்தில் கட்டமுடியாதவா்களை பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று கட்டுமாறும் வற்புறுத்துகின்றனா். நடைமுறைச் சிக்கலை உணராமல் செயல்படும் கல்லூரி நிா்வாகத்தைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்றனா்.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்தரப்பில் கூறியது: கல்லூரிக்கு உரிய நேரத்தில் மாணவா்கள் வருவது அவசியம். ஆனால், பொருந்தாத காரணத்தைக் கூறி கல்லூரிக்கு மாணவா்கள் தாமதமாக வருவது சரியல்ல. மாணவ, மாணவியா் நலனுக்காகவே விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரி உள்கட்டமைப்பு படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் தெரிவிக்கப்பட்டது.
மாணவா்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த, ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி.வெள்ளத்துரை அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.