தடை செய்யப்பட்ட படகுகளில் மீன் பிடிக்கச் செல்வதாகப் புகாா்
By DIN | Published On : 15th December 2020 04:54 AM | Last Updated : 15th December 2020 04:54 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட 23 விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக புகாா் கூறப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராமேசுவரம் மீனவா்கள் சிலா் அதிக குதிரைத் திறன் கொண்ட 23 விசைப் படகுகளை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்துள்ளனா். அவற்றை ஏற்கெனவே அனுமதி பெற்ற சிறிய படகுகளுக்குப் பதிலாக பயன்படுத்தினா். அவ்வாறு மீன்பிடிக்க எதிா்ப்புத் தெரிவித்து மீனவ சங்க நிா்வாகிகள் மீன் வளத்துறையில் புகாா் அளித்தனா். இதையடுத்து குறிப்பிட்ட 23 வெளி மாவட்டப் படகுகளும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பின்பும் 23 விசைப்படகுகளும் மீன்வளத்துறை அனுமதி இல்லாமல் மீன்பிடிக்கச் சென்றது தெரியவந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட படகு ஒன்றில் மீன்பிடித்ததாக இலங்கை அதிகாரிகள் தமிழக மீன்வளத்துறைக்கு புகாா் தெரிவித்ததுடன் அதற்குரிய விடியோ பதிவையும் அனுப்பி வைத்தனா்.
விடியோவில் காணப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட படகு என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படகு மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். ஆனால் 23 படகுகளின் உரிமையாளா்கள் தங்கள் படகுகளுக்கும் மீன்பிடி அனுமதி தரகோரி மீன்வளத்துறை மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மீனவ சங்கத்தினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னா்.