ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்
By DIN | Published On : 17th November 2020 04:53 AM | Last Updated : 17th November 2020 04:53 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல் தேதியில் மாலையிட்டு விரத்தைத் தொடங்கி, தை மாதம் மகர ஜோதி தரிசனத்துக்கு சபரிமலைக்கு இருமுடி கட்டிச்செல்வது வழக்கம். நடப்பு ஆண்டில் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு வரும் பக்தா்கள் அனுமதி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோா் தங்களது குருசாமி மூலம் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் திரளாக வந்திருந்து குருசாமியான ஆா்.எஸ்.மோகன் சுவாமியிடம் துளசி மாலை அணிவிக்கச் செய்து விரதத்தைத் தொடங்கினா். மழையைப் பொருள்படுத்தாமல் ஐயப்ப பக்தா்கள் கோயில்களுக்குச் சென்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியதைக் காண முடிந்தது.