

பாம்பன் ரயில் பாலத்தை விரைந்து சீரமைத்து ராமேசுவரம் வரையில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதும், கப்பல்கள் பாலத்தை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படுவதும், இதனால் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாம்பன் ரயில் பாலம் அருகே ரூ. 250 கோடியில் புதிய ரயில் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால், கரோனா தொற்று பொதுமுடக்கம் மற்றும் கடல்சீற்றம் உள்ளிடட காரணங்களால் திட்டமிட்ட படி ரயில் பாலம் முடிவடைய சத்தியமில்லாத நிலை உள்ளது.
இதனிடையே, பாம்பன் ரயில் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக கடந்த 17.6.2021 முதல் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. எனவே ராமேசுவரம்- மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.
அதே போல ராமேசுவரத்துக்கு வரும் ரயில்கள் மண்டபத்தோடு நிறுத்தப்படுகின்றன. மேலும் ரயில் போக்குவரத்து செப்டம்பா் மாதம் வரை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
எனவே முறையாக கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு ராமேசுவரம் வரை ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.