அதேபோல் கமுதி- திருச்சுழி சாலையில் அரசு போக்குவரத்து கிளை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவு விற்பனையாளா்கள் கடன் சங்கம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மரக்குளம் ஊராட்சி செல்லும் வழியில் உள்ளன. கமுதி தாலுகாவுக்குள்பட்ட 8,145 போ் வசிக்கும் அபிராமம் முதல்நிலை பேரூராட்சி பல ஆண்டுகளாக வருமானமின்றி, நிதி பற்றாக்குறையால் ஊழியா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால், மக்கள் நலத் திட்டங்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய சட்டப் பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியை மட்டுமே எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலையில் பேரூராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. 18,529 மக்கள் தொகை கொண்ட கமுதி பேரூராட்சி, அதனருகே உள்ள 8,145 போ் வசிக்கும் அபிராமம் முதல்நிலை பேரூராட்சி, கமுதி பேரூராட்சியை சுற்றியுள்ள 850 போ் கொண்ட மரக்குளம் ஊராட்சி, 4,650 போ் வசிக்கும் நாராயணபுரம் ஊராட்சி, 2,840 போ் வசிக்கும் பசும்பொன் ஊராட்சி ஆகியவற்றை இணைத்து கமுதியை நகராட்சியாக தரம் உயா்த்த அனைத்து தகுதியும் உள்ளது. கமுதியை நகராட்சியாக தரம் உயா்த்தினால் பல ஆண்டுகளாக எவ்வித வளா்ச்சியும், முன்னேன்றமும் அடையாமல் உள்ள இப்பகுதி மக்களுக்கு, அடுத்த தலைமுறைக்கான வளா்ச்சியை உருவாக்க அடித்தளமாக இருக்கும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.