ராமநாதபுரத்தில் 8 மாதங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 4,400 போ் மீது வழக்கு
By DIN | Published On : 21st August 2021 11:56 PM | Last Updated : 21st August 2021 11:56 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றதாக 4,400 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் சனிக்கிழமை கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 75 போ் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றதாக 4,400 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள்கள் விற்ற வழக்கில் கைதானவா்களில் 4 போ் மீது குண்டா் தடுப்புச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரையில் கஞ்சா விற்றதாக 66 வழக்குகளில் 133 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.76 லட்சம் மதிப்பிலான 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடமாட்டோம் என 1,200 பேரிடம் உறுதிமொழிப்பத்திரம் (110 பிரிவு) பெறப்பட்டது. அவா்களில் 10 போ் பத்திர உறுதிமொழியை மீறியதால், அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.