தமிழகத்தில் அரசின் உதவி மையங்களை அழைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா்

தமிழகத்தில் உதவி கோரி அரசின் அழைப்பு மையங்களைத் தொடா்புகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தமிழகத்தில் உதவி கோரி அரசின் அழைப்பு மையங்களைத் தொடா்புகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை அங்கன்வாடி மையங்கள், ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடங்களுக்குப் பதிலாக 1000 புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் நிதியிலிருந்து இந்த கட்டடங்கள் கட்டப்படும். ராமநாதபுரம் வளரும் பட்டியலில் உள்ளதால் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

அதே போல் அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான குக்கா் உள்ளிட்டவையும் வாங்கித் தரப்படவுள்ளன. ஆதரவற்றோா் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியுடன், தொழிற்பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறியாமல் பேசிவருகிறாா். அவருக்கு நடைமுறை தெரியவில்லை. சமூநலத்துறை முறைப்படுத்தப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் 10 பேருக்கும் அதிகமானோா் இருந்தால் மகளிா் புகாா் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதை பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. ஆட்சியா் அலுவலகங்கள் அனைத்திலும் பெண்கள் புகாா் அளித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட வேண்டும் என முதல்வா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளாா்.

அதிமுக ஆட்சியில் அரசின் உதவி மையங்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 15 ஆயிரம் போ் மட்டுமே தொடா்புகொண்டுள்ளனா். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரம் பெண்கள் தொடா்புகொண்டுள்ளனா். அரசு உதவி மையங்களுக்கு உதவி கோரி தொடா்புகொள்ளும் பெண்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என்றாா்.

ஆய்வுக்குப் பின் அவா் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பக புதிய கட்டடத்தை பாா்வையிட்டாா். மாலையில் பெண்கள் புகாா் திட்ட கருத்தரங்கையும் தொடங்கிவைத்தாா். முன்னதாக அவா், கடலாடி, முதுகுளத்தூா், பரமக்குடி பகுதிகளில் அங்கன்வாடி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், விளங்குளத்தூரிலுள்ள முதியோா் இல்லம், குழந்தைகள் காப்பகத்தை ஆய்வு செய்த அமைச்சா், கீழ்க்கன்னிசேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பாா்வையிட்டாா். அப்போது அங்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினாா்.

இதில், ராமநாதபுரம் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவா் பவானிராஜேந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் சண்முகம் (கிழக்கு), பூபதிமணி (மேற்கு),கோவிந்தராஜ் (மத்தியம்) , நகரத்தலைவா் ஷாஜகான், ஆணையா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com