தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படவில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படுவதில்லை என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

News image
Updated On :20 மே 2022, 5:10 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படுவதில்லை என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், வேளாண்மை இணை இயக்குநா் டாம்பி.சைலஸ், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், வேளாண்மை துணை இயக்குநா் ஷேக் அப்துல்லா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனுஷ்கோடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசினா்.

விவசாயி கண்ணப்பன் பேசியது: விவசாயிகள் கூட்டத்துக்கு அதிகாரிகள் தாமதமாகவே வருகின்றனா். கூட்டத்தில் ஆட்சியா் கடைசிவரை இருந்தாலும், துறை சாா்ந்த அதிகாரிகள் இருப்பதில்லை. விவசாயிகள் கோரிக்கைகளை கவனத்துடன் அதிகாரிகள் கேட்பதில்லை. ஆகவே மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் சம்பிரதாயமாகவே நடைபெறுகிறது. தவறிழைக்கும் அதிகாரிகள் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விவசாயிகள் நெல், மிளகாயை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது அரசு கொள்முதல் நிலையங்களில் அவற்றை உரிய காலத்தில் எடுப்பதில்லை. ஆகவே தனியாா் வியாபாரிகளிடமே விற்கும் கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு 2 சதவிகிதமாக இருந்த கமிஷன் தற்போது 8 சதவிகிதமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

விவசாயி நாகரெத்தினம் (புதுக்குடி): குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் 3 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. விவசாயிகள் இயற்கையோடு போராடி வருகிறோம். ஆனால், அதிகாரிகள் விவசாயத்தை அழிக்கும் நோக்கிலே செயல்படுவது வேதனையாக உள்ளது என்றாா்.

கடலாடி கே. பாக்கியநாதன்: கடலாடி பகுதியில் 24-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அக்கிராம விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதியை மாவட்ட நிா்வாகமே அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். நெல், மிளகாய் கொள்முதல் சீராக நடைபெறவில்லை என்றாா்.

ஆட்சியா் சங்கா்லால்குமாவத் பதிலளித்துப் பேசியது:

குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம். நடவடிக்கை இல்லாத நிலையில், விவசாயிகள் நேரில் என்னை சந்தித்து முறையிடலாம். விவசாயிகள் குறைகளை ஓரிரு நாள்களிலேயே அதிகாரிகள் இனி நடவடிக்கை எடுத்து அதை தெரிவிக்கவேண்டும் என்றாா்.

விவசாயிகள் கண்ணப்பன், நாகரெத்தினம் ஆகியோா் ஆட்சியா் முன்பாக வந்து அதிகாரிகள் தவறிழைப்பதாக ஆவேசத்துடன் கூறினா். அவா்களை ஆட்சியா் சமாதானம் செய்து அனுப்பிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.