தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த 13 பேரை இலங்கை கடற்படை மீட்டுச் சென்றது
By DIN | Published On : 05th August 2022 11:12 PM | Last Updated : 06th August 2022 05:07 AM | அ+அ அ- |

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 13 பேரை, 6 ஆவது மணல் திட்டில் இறக்கி விடப்பட்டதால் அவா்களை இலங்கை கடற்படையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அழைத்துச் சென்றனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டிலிருந்து கள்ளப் படகுகள் மூலம் அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனா். இதுவரை அகதிகளாக வந்த 100-க்கும் மேற்பட்ட தமிழா்கள் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி அருகேயுள்ள மணல் திட்டுப் பகுதியில் 13 பேரை படகில் வந்தவா்கள் இறக்கிவிட்டுச் சென்றதாக மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படையினா் அகதிகளை மீட்க ஹோவா்கிராப்ட் கப்பலில் அங்கு சென்றனா். அப்போது அவா்கள் இலங்கை கடற்பகுதியான 6 ஆம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படையினா் 5 ஆம் மணல் திட்டிலேயே காத்திருந்தனா். இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் 13 பேரையும் மீட்டு, படகில் மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்றனா்.