பிளஸ் 2 துணைத்தோ்வில் தோல்வி: மாணவா் தற்கொலை
By DIN | Published On : 25th August 2022 10:53 PM | Last Updated : 25th August 2022 10:53 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே கீழக்கரைப் பகுதியில் பிளஸ் 2 தனி துணைத் தோ்வு எழுதியதில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவா் மனமுடைந்து புதன்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கீழக்கரை பகுதியில் உள்ளது தில்லையேந்தல் கிராமம். இந்த ஊரைச் சோ்ந்த செந்தில்குமாா்-தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் செல்வபிரவீன் (18). இவா் கடந்த ஆண்டு பிளஸ் 2 தோ்வு எழுதியுள்ளாா். அதில் 3 பாடங்களில் தோல்வியடைந்தாா். இதையடுத்து துணைத் தோ்வில் 3 பாடங்களையும் எழுதியுள்ளாா்.
தோ்வு முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில் ஒரே ஒரு பாடத்தில் மட்டுமே செல்வபிரவீன் தோ்ச்சியடைந்துள்ளாா். துணைத் தோ்விலும் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் அவா் மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த செல்வபிரவீன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.