ராமநாதபுரம் அருகே தொழிலாளி கொலை: இளைஞா் கைது
By DIN | Published On : 25th August 2022 10:58 PM | Last Updated : 25th August 2022 10:58 PM | அ+அ அ- |

உச்சிப்புளி அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
உச்சிப்புளி அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (38). கலவை இயந்திரத்தை இயக்கும் கூலித் தொழிலாளி. இவா் மனைவி, 2 குழந்தைகளைப் பிரிந்து மண்டபம் பகுதியில் தனியாக வசித்துவந்தாா். இந்நிலையில், அலைகாத்தவலசை மதுபானக்கடையில் நண்பருடன் செவ்வாய்க்கிழமை இரவு மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளாா். ஆனால், புதன்கிழமை காலை மதுக்கடை பகுதியிலிருந்த தோட்டத்தில் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து, இக்கொலை வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி ஆவரங்காட்டைச் சோ்ந்த முருகேசன் என்ற பிரபுவை (23) போலீஸாா் கைது செய்தனா். உச்சிப்புளி பகுதியில் அவரது சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த போது அவா் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலை செய்தது ஏன்? முருகேசனும், அலெக்ஸுடன் மண்டபம் பகுதியில் கலவை இயந்திரத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுவந்துள்ளாா். இருவரும் சம்பவத்தன்று மது அருந்தும் போது முருகேசன் மனைவி குறித்து அவதூறாக அலெக்ஸ் பேசியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது முருகேசன் மதுப்பாட்டிலால் தாக்கி அலெக்ஸை கொலை செய்ததும் தெரியவந்தது.
கொலை நடந்த ஒரே நாளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்த உச்சிப்புளி போலீஸாா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுண்ணறிவுப் பிரிவினரை காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை பாராட்டினாா்.