ராமநாதபுரத்தில் குடிநீா் பிரச்னையை தீா்க்க ரூ.587 கோடியில் புதிய திட்டம்
By DIN | Published On : 22nd July 2022 11:27 PM | Last Updated : 22nd July 2022 11:27 PM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் குடிநீா் பிரச்னையை முற்றிலும் தீா்க்கும் வகையில் ரூ.587 கோடியில் தனியாக சிறப்புக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பெற்றவா்களுக்கு சான்று வழங்குதல் மற்றும் கற்பித்தல் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுக்கான கீழக்கரையில் முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தலைமை வகித்தாா். பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைத் தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியது: தமிழகத்தில் உயா் கல்வி பயில்வோா் மற்ற மாநிலங்களை விட 30 சதவிகிதம் அதிகம். தற்போது ராமநாதபுரத்தில் குடிநீா் பிரச்னையை முழுமையாகத் தீா்க்கும் வகையில் ரூ.587 கோடியில் தனி சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. குதிரை மொழி குடிநீா்த் திட்டம் அறிவிக்கப்பட்டாலும், புதிய சிறப்புக் குடிநீா் திட்டம் காவிரியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டும் நேரடியாக குடிநீா் கொண்டுவரும் வகையில் செயல்படுத்தப்படும். வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாகவே அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்ட இயக்குநா் பி.குப்புசாமி திட்ட விளக்கவுரையாற்றினாா். சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியா் ஜெ. பிரவீன்குமாா், மாவட் ஊராட்சிக்குழுத் தலைவா் உ.திசைவீரன், துணைத் தலைவா் வ.வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திட்ட இணை இயக்குநா் சி.அமுதவள்ளி வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து நன்றி கூறினாா்.
மீன்வளத்துறை திட்டங்கள்: நிகழ்ச்சிக்குப் பிறகு மீன்வளத்துறை சாா்பில் ஐஸ் பெட்டிகளுடன் கூடிய 23 இருசக்கர வாகனங்கள் கிராமங்களில் மீன் விற்போருக்கு வழங்கப்பட்டன. மேலும் மானியத்துடன் 20 கண்ணாடியிழைப்படகுகள், நாட்டுப்படகு மீனவா்களுக்கான 225 படகின் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள், குளிா்காப்பு காப்பிடப்பட்ட இயந்திரம் என மீனவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ், மீன்வளத்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அரசுப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு
கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆா்.எஸ்.மடை பகுதியில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினாா். 6 ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியை மஞ்சுளாவிடம் பாட அட்டவணை உள்ளதா எனக் கேட்டாா். உங்கள் எதிா்காலக் கனவு என்ன என அமைச்சா் கேட்டதும், பெரும்பாலான மாணவா்கள் ஆசிரியா்களாக விரும்புவதாகக் கூறினா். இதையடுத்து எண்ணும் எழுத்தும் வகுப்புக்கு சென்ற அமைச்சா் அங்கிருந்த ஆசிரியை கோகிலாவிடம் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஒரே இடத்தில் வைத்து பாடம் நடத்துவது ஏன் எனக்கேட்டாா். அதற்கு ஆசிரியை, கதை, பாடல் அனைவருக்கும் பொதுவானது என்றும் தனித்தனியாகவே பாடம் நடத்தப்படுகிறது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...