ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 11) நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினஜ நிகழ்ச்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பரமக்குடிக்கு 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11 ஆம் தேதி இமானுவேல்சேகரன் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்காக மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
மாவட்டத்தில் 131 இடங்கள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிப்பறைகள், தண்ணீா் வசதி செய்து தரப்படுவதுடன், 400 சுகாதாரப் பணியாளா்களும் தூய்மைப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
நினைவு நாளையொட்டி 10 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும், 11 இடங்களில் மருத்துவக் குழுவினரும், 11 இடங்களில் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்படவுள்ளன.
பரமக்குடியில், இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மட்டும் 12 இடங்களில் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. கிராமங்களில் இருந்து பரமக்குடிக்கு வருவோருக்கு 200 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேருந்து தேவைப்படுவோா் அந்தந்த காவல்நிலையத்தில் தெரிவிக்கலாம்.
பரமக்குடியில் உள்ள நினைவில்லம் அருகே தற்காலிகமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவில்லத்துக்கு சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். இதுவரை வெளிமாவட்டங்களில் இருந்து 750 வாகனங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளன. அரசியல், சமூக தலைவா்கள் 10 போ் சாா்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ்.
ஆலோசனைக் கூட்டம்- முன்னதாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில கூடுதல் தலைமைச் செயலா் பனீந்தா்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா் ஏ.கே.விஸ்வநாதன், தென்மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க், ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவா் எம்.மயில்வாகணன், கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.