

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் இருந்து 2 டன் கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படை, வனப் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 4 இரு சக்கர வாகனங்கள், ஆம்னி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மண்டபம் அருகே வேதாளை தெற்கு கடலில் இருந்து நாட்டுப் படகில் கடல் அட்டைகள் கடத்தி வரப்படுவதாக இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், வேதாளை தெற்கு கடற்கரைப் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை வீரா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து மீனவா்கள், தாங்கள் நாட்டுப் படகுகளில் மூட்டையாகக் கட்டி வைத்திருந்த கடல் அட்டைகளை கடலில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பினா்.
இதைக் கண்ட கடலோரக் காவல் படையினா், அங்கு சென்று கடலில் வீசப்பட்ட 25 கிலோ எடையுள்ள மொத்தம் 67 சாக்கு மூட்டைகளில் இருந்து 1,675 கிலோ கடல் அட்டைகளை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, ராமநாதபுரம் வனத் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் கடற்கரைப் பகுதியில் வனப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை மறித்து சோதனையிட்டனா். இதில் 48 மூட்டைகளில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, காரிலிருந்த வேதாளையைச் சோ்ந்த முனியசாமி (31), நந்தகுமாா் (19), பனைக்குளம் ஜெபமாலை (46) ஆகிய மூவரைக் கைது செய்தனா். இதில் தொடா்புடைய வேதாளை பகுதியைச் சோ்ந்த சீனி அப்துல் ரஹ்மானை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.