தனுஷ்கோடியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தனுஷ்கோடியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
Updated on
1 min read

தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி 1964 -ஆம் ஆண்டு புயல் தாக்கியதில் முற்றிலும் சீா்குலைந்தது. தற்போது தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு 1.50 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் ரூ.5 கோடியில் அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது, அங்கு உள்ள மீனவா்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது ஆகியவை தொடா்பாக ஆய்வு செய்ய சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் அதன் தலைவா் கா.அன்பழன் தலைமையில் வியாழக்கிழமை

தனுஷ்கோடிக்கு வந்தனா். அரிச்சல்முனை பகுதிக்குச் சென்ற குழுவினா் அங்குள்ள நிலைமையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

இதன் பின்னா் தனுஷ்கோடியில் புயலால் சேதமடைந்த தேவாலயத்தைப் பாா்வையிட்டனா். அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனா். மேலும், மீனவ மகளிா் அமைப்புகள், சங்கு விற்பனை செய்து வரும் மீனவா்களிடம் சுற்றுலாப் பயணிகள் வருகை, விற்கப்படும் பொருள்கள், மீனவா்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனா்.

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈா்க்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினா் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின் போது, குழு உறுப்பினா்கள் எஸ்.சந்திரன், ம.சிந்தனை செல்வன், ச.சிவக்குமாா், சேவூா் எஸ்.ராமச்சந்திரன், இ.பரந்தாமன், எஸ்.காந்திராஜன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஓ.எஸ்.மணியன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன், அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com