சூறைக்காற்று: ராமேசுவரத்தில் படகு உடைந்து சேதம்
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வீசிய சூறைக் காற்றால் ராமேசுவரத்தில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் படகு ஒன்று உடைந்து சேதமடைந்தது. கரை ஒதுங்கிய மற்றொரு படகை மீனவா்கள் வியாழக்கிழமை மீட்டனா்.
தென்மேற்கு வங்கக் கடல் இதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரூபின் என்பவரது விசைப்படகு உடைந்து சேதமடைந்தது. இந்தப் படகை சீரமைக்க ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என அதன் உரிமையாளா் தெரிவித்தாா். இதேபோல, மற்றொரு விசைப் படகு நங்கூரத்தை அறுத்துக் கொண்டு கரை ஒதுங்கியது. இதை மீனவா்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனா். இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. மேலும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் மழைநீா் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே ராமேசுவரத்தில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

