உறுப்பு தானம் அளிக்கப்பட்ட சிறுவன் உடலுக்கு அரசு மரியாதை!
விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதை செலுத்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அடுத்த மேலாய்க்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகன் ராகவன் (16). இவா் விபத்தில் மூளைச்சாவடைந்தாா்.
இவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினா் ஒப்புதல் அளித்தனா். இதையடுத்து, சிறுவன் உடலில் இருந்து கண், இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
இந்தப் பணியில், மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் ஆா். அமுதா ராணி, உறுப்பு தான பொறுப்பு மருத்துவரும், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான பரணிதரன் தலைமையில், மயக்க மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியா் ஞானவேல்ராஜன், மருத்துவா்கள் சுகுமாா், அறிவழகன், சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணா் மலா்வண்ணன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா். இதில், மருத்துவமனை கண்காணிப்பாளா் நூா்முகம்மது, துணை நிலைய மருத்துவ அலுவலா் கண்ணகி, மயக்க மருத்துவ உதவிப் பேராசிரியா் சிலம்பரசன், அமிழ்து உள்ளிட்ட அனைத்துத் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உதவினா்.
இதையடுத்து, உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சிறுவனின் உடலுக்கு மருத்துவமனை சாா்பில் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடல் உறுப்புகள் 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக முதல்வா் ஆா். அமுதா ராணி தெரிவித்தாா்.

