மானிய விலையில் நிலக்கடலை விதை வழங்க விவசாயிகள் கோரிக்கை
தற்போது பெய்து வரும் பருவமழையை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யும் வகையில் மானிய விலையில் நிலக்கடலை விதை வழங்க


தற்போது பெய்து வரும் பருவமழையை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யும் வகையில் மானிய விலையில் நிலக்கடலை விதை வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை,காளையார்கோயில், திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி, சாக்கோட்டை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் வறட்சி காரணமாக 2016-17 ஆம் ஆண்டில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டரில் தான் பயிரிட்டனர்.
இதையடுத்து, இந்தாண்டு தற்போது தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் சில விவசாயிகள் மட்டும் குறைந்த பரப்பளவில் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் போதிய பணமின்றி நிலக்கடலை விதை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆகவே மானிய விலையில் நிலைக்கடலை விதை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து எஸ்.புதூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியது: கடந்த ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிட்டேன். இதற்காக சுமார் ரூ.23 ஆயிரம் வரை செலவு செய்தேன். வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் உரிய விளைச்சலின்றி பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது நிலக்கடலை பயிரிட நிலத்தை உழுது பக்குவப்படுத்தி வைத்துள்ளேன். ஆனால் தனியார் விற்பனைக் கடைகளில் நிலக்கடலை விதை ரூ.110 வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ வரை விதை தேவைப்படும். ஏற்கனவே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு மானிய விலையில் நிலக்கடலை விதை வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண். அலுவலர் ஒருவர் கூறியது: சிவகங்கை வட்டார விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் குறைந்த அளவு நிலக்கடலை விதை கையிருப்பில் உள்ளது. மாவட்டம் முழுவதும் மானிய விலையில் நிலக்கடலை விதை வழங்க கையிருப்பு இல்லை. ஜூலை மாத இறுதியில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதை வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வந்தவுடன் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் நிலக்கடலை விதை வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...