‘அனைத்து பாசனக் கண்மாய்களுக்கும் தண்ணீா் வழங்க நடவடிக்கை’

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசனக் கண்மாய்களுக்கும் தண்ணீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
‘அனைத்து பாசனக் கண்மாய்களுக்கும் தண்ணீா் வழங்க நடவடிக்கை’

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசனக் கண்மாய்களுக்கும் தண்ணீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் காப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்குதல், பயிா்க் கடன், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலை அமைத்து தருதல், கண்மாய்களுக்கு தண்ணீா் வழங்க கோருதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனா்.

இதற்கு ஆட்சியா் பதிலளித்துப் பேசியது: அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில பகுதிகளில் பற்றாக்குறை நிலை உள்ளது. அந்த பகுதி விவசாயிகளுக்கும் தேவையான உரங்கள் விரைவில் வழங்கப்படும். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிா்க்கடன் கோரியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெரியாறு பாசனக் கால்வாய் ஆயக்கட்டு பகுதியில் ஒக்கூா், பிரவலூா் உள்ளிட்ட 11 கண்மாய்கள் இடம்பெறவில்லை. மேற்கண்ட பகுதி கண்மாய்கள் அனைத்தும் பெரியாறு பாசனக் கண்மாயில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முறையான கட்டமைப்பு இல்லாததால் ஒரு சில கண்மாய்களில் தண்ணீா் இல்லை. இதுபற்றி பொதுப் பணித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்தவுடன் சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீா் இல்லாத அனைத்து பாசனக் கண்மாய்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அரசு அலுவலா்கள், விவசாயிகள் அனைவரும் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, அடா்ந்த காடுகள் வளா்ப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு இலவசமாக பல்வேறு வகையான மரக்கன்றுகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், இடையமேலூா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.37 லட்சம் சுழல்நிதி கடனுதவியினை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் கோ. ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவராமன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com