இளையான்குடியில் ஆதார் சேவைக்கு அலைக்கழிக்கப்படுவதாக புகார்: சாப்பாட்டுடன் காத்துக் கிடக்கும் மக்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை சேவை பெற அலைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாப்பாட்டுடன் காத்துக் கிடக்கும் மக்கள்
சாப்பாட்டுடன் காத்துக் கிடக்கும் மக்கள்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை சேவை பெற அலைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆதார் அட்டைக்காக கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் உள்ளிட்டோர் சாப்பாட்டுடன் வந்து அலுவலகத்தில் காத்துக் கிடக்கும் நிலை தொடர்கிறது. இளையான்குடி வட்டத்தில் உள்ள 53 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் ஆதார் அட்டை சேவை பெற இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த அலுவலகத்தில் புதிய ஆதார் அட்டை பெறவும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு இணையதள சேவையுடன் இரு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினமும் ஆதார் அட்டை சேவைகளுக்கு இளையான்குடி பகுதியிலிருந்து ஏராளமானோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
. இவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் ஆதார் அட்டை சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 70 டோக்கன்கள் வழங்கப்பட்டு விண்ணப்பதாரர் ஆதார் அட்டை சேவை பெற வரும் தேதியும் தெரிவித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு டோக்கன் பெற்று குறிப்பிட்ட தேதியில் ஆதார் அட்டை சேவை பெற இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நீண்ட தொலைவிலிருந்து ஆதார் அட்டை சேவைக்காக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர் திரும்ப மாலை நேரம் ஆகிவிடும் என்பதால் வீடுகளிலேயே உணவு சமைத்து எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். தற்போது இப்பகுதியில் வெயில் கொளுத்தி வருவதால் முதியவர்கள் வெயில் கொடுமை தாங்காமல் அலுவலக வளாகத்தில் நிழல் இருக்கும் பகுதியில் படுத்து விடுகின்றனர்.. இதுகுறித்து ஆதார் அட்டை சேவைக்காக பல நாட்களாக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்துக் கிடக்கும் பெண்கள் கூறுகையில் புதிய ஆதார் அட்டை,ஆதார் அட்டை முகவரி திருத்தம், புதிய புகைப்படம் இணைத்தல் போன்ற சேவைக்காக விண்ணப்பித்து பல நாட்கள் ஆகிவிட்டது.

ஆதார் சேவை பிரிவில் இருக்கும் ஊழியர்கள் கூறிய நாட்களில் அலுவலகத்திற்கு வந்து காத்திருக்கிறோம்.  ஆனால் இதுவரை எங்களுக்கு ஆதார் அட்டை சேவை கிடைக்கவில்லை. இதனால் வீண் அலைச்சலும் பணச் செலவும் ஏற்படுகிறது. காலையில் அலுவலகத்திற்கு வந்தால் வீடு திரும்ப இரவு நேரம் ஆகி விடுகிறது என்றனர்.

இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை பிரிவில் பணிபுரியும் ஊழியரிடம் கேட்டபோது தினமும் டோக்கன் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. ஆனால் இணையதள சேவை சரிவர கிடைக்காததால் குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் அட்டை சேவை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இணையதள சேவை சரிவர கிடைத்துவிட்டால் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் இணையதள சேவை குறைபாடு என்பது பல மாதங்களாக தொடர்கிறது. எனவேதான் ஆதார் அட்டை சேவைக்காக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்துக் கிடக்கும் நிலை தொடருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com