கோவிலூர் தென் சபாநாயகர் கோயில் குடமுழுக்கு விழா!

காரைக்குடி அருகே கோவிலூர் மடலாய வளாகத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பரிவார சகித 'தென் சபாநாயகர்' கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவிலூர் தென் சபாநாயகர் கோயில் குடமுழுக்கு விழா
கோவிலூர் தென் சபாநாயகர் கோயில் குடமுழுக்கு விழா
Published on
Updated on
2 min read

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூர் மடலாய வளாகத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பரிவார சகித 'தென் சபாநாயகர்' கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இருநூற்றுப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வேதாந்த நெறி தழைத்தோங்க சீர்வளர்சீர் ஆண்டவர் சாமிகளால் கோவிலூர் மடாலயம்  தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடாலயம் வேதாந்தப் பாடங்களைத் தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்தோதி வருகிறது.

கோவிலூர் மடலாயத்தின் 12-வது  பட்டமாக விளங்கிய  நாச்சியப்ப சுவாமிகள் தில்லை எனப்படும் சிதம்பரம் ஆனந்த நடராஜர் மீது தனிப்பற்று கொண்டு ஆனந்த நடராஜருக்கு தென் சபாநாயகர் திருக்கோயில் தில்லையில் உள்ளது போன்று கோவிலூர் மடாலய வளாகத்தில் கோயில் கட்டும் பணியை தொடங்கினார்.

தொடர்ந்து அப்பணி நடைபெற்று முடிவடைந்தது. இங்கு அருள்மிகு சிவகாம சுந்தரி உடனாய ஆனந்த நடராஜர் மூல தெய்வமாக விளங்குகிறார். அருள்மிகு விநாயகர், சுப்பிரமணியர், கோவிந்தராஜப் பெருமாள், திருமூலட்டநாதர், சிவகாமி அம்மன், சண்டிகேசர் போன்ற தெய்வங்களும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது போலவே இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) முதல் தொடங்கி  நடைபெற்று புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவுற்று காலை 11 மணிக்கு கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்கும், அதைத்தொடர்ந்து 11.05 மணிக்கு ஆனந்த நடராஜர், சிவகாமியம்மன் மற்றும பரிவார சன்னதிகளுக்கும் கும்ப பிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் பல சிறப்புகள் உள்ளன. இத்தலத்தினைத் தரிசித்தால் சிதம்பரத்தில் நடராஜரை வழிபட்ட பேறு கிடைக்கும். ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் போன்றுச் சிதம்பரத்தில் நடைபெறும் விழாக்கள் அனைத்தும் இங்கும் நடைபெற உள்ளது. மக்கள் கூட்ட நெருக்கடி இன்றி சிதம்பர தரிசனத்தை இங்குக் காணலாம். சிதம்பரத்தில் நடைபெறும் படிக லிங்க பூசை, நான்கு கால பூசை ஆகியனவை இங்குத் தில்லை வாழ் அந்தணர் எனப்படும் தீட்சிதர்களால் நடத்தப்பட உள்ளன. சிற்சபை, பொற்சபை அமைப்புகள், சிதம்பர ரகசியம் போன்றனவும் இங்கு உண்டு.

தில்லை நடராஜர் கோயில் போலவே அமைந்த ஒரே கோயில் இதுவாகும்.

விழாவில் கோவிலூர் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் முன்னிலை வகித்தார். துலாவூர் ஆதீனம், பாதரக்குடி ஆதீனம், நகரத்தார்கள், கோவிலூர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மடாலய அலுவலர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com