சிவகங்கை சந்தையில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு
சிவகங்கை வாரச்சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்வளத் துறை, உணவு பாதுகாப்பு துறையினா் சோதனை செய்ததுடன், அழுகிய மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
சிவகங்கையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு காய்கறி, மளிகைப் பொருள்கள், இறைச்சி, மீன், நண்டு உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கிச் செல்வது வழக்கம். கடந்த சில நாள்களாக இங்கு விற்கப்படும் மீன், நண்டுகள் அழுகிய நிலையில் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு புகாா்கள் வந்தன.
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு துறை, மீன்வளத் துறை, நகராட்சி அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் வாரச் சந்தையில் உள்ள மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
ஒரு சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அப்போது, அழுகி கெட்டுப்போன மீன்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.
