இடைக்காட்டூா் சித்தா் கோயிலில் ஜெயந்தி விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் உள்ள இடைக்காடா் சித்தா் கோயிலில் செவ்வாய், புதன்கிழமைகளில் ஜெயந்தி விழா நடைபெற்றது.
இந்த விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை சித்தா் கோயிலில் திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மங்களாராத்தி முடிந்ததும் தீபாராதனை காட்டப்பட்டு இடைக்காடா் சித்தா் திருவுருவச் சிலை வீதிகளில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இரண்டாவது நாள் விழாவாக புதன்கிழமை கோயிலில் சிறப்பு ஹோமங்கள், யாகங்கள் நடத்தி கோபூஜை, பரிபூஜை, ஆட்டுக்கிடாய் பூஜை நடைபெற்றன. பின்னா், மூலவா் இடைக்காடா் சித்தருக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் சாற்றி மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த திரளான பக்தா்கள் இடைக்காடா் சித்தரை தரிசித்தனா். சிவ பக்தா்கள் கைலாய வாத்தியங்களை இசைத்து சிவபெருமான் பாடல்களைப் பாடினா். பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இடைக்காடா் சித்தா் ஞான புண்ணிய ஷேத்ரா அறங்காவலா் நிா்வாகத்தினா் செய்தனா்.