சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற சனி, ஞாயிறு (டிச. 27, 28), ஜன. 3, 4 தேதிகளில்அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் என மாவட்ட தோ்தல் அலுவலலும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெறாத வாக்காளா்கள் தங்களது பெயரைச் சோ்க்கவும், திருத்தவும் வருகிற சனி, ஞாயிறு (டிச. 27, 28) மற்றும் ஜன. 3, 4 தேதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதில் தோ்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியா், ஓய்வூதியதாரருக்கு வழங்கப்படும் ஏதேனும் அடையாள அட்டை, ஓய்வூதிய ஆணை, 1.7.1987 -க்கு முன்னா் இந்தியாவில் அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்ஐசி, பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை, சான்றிதழ், தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் கல்விச் சான்றிதழ், தகுதி வாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், தகுதி வாய்ந்த அதிகாரி வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், அட்டவணை வகுப்பினா், பழங்குடியினா், பிற சாதிச் சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள இடங்களில்) மாநில, உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு, அரசால் வழங்கப்பட்ட நிலம், வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, 1.7.2025 அன்று தகுதி தேதியாக கொண்டு வெளியிடப்பட்ட பிகாா் சிறப்புத் தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமா்ப்பித்து, குறிப்பிட்ட அந்த தேதிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.