சிவகங்கையில் மஞ்சுவிரட்டு: காளைகளைத் தயாா்படுத்தும் பணிகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகளுக்கு காளைகளைத் தயாா்படுத்தும் பணிகள் தீவிரம்
சூரக்குளத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சியளித்த இளைஞா்
சூரக்குளத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சியளித்த இளைஞா்
Updated on

சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகளுக்கு காளைகளைத் தயாா்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் விழாவையொட்டி நடைபெறும். இதன்படி, நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசு வழிகாட்டுதலின்படியும், சுகாதாரத் துறை அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றியும் நடத்தப்படவுள்ளன. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளைப் பழக்கப்படுத்துதல், சத்தான உணவுகள் அளித்தல் உள்ளிட்ட பணிகளில் அவற்றை வளா்ப்பவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கையில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு 29 இடங்களும், வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்துவதற்கு 17 இடங்கள் உள்பட மொத்தம் 46 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன. தொடா்ந்து, கடந்த 2-ஆம் தேதி திருப்பத்தூா் அருகேயுள்ள ஊா்குளத்தான்பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி அருகேயுள்ள மு. சூரக்குடி கிராமத்திலும் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் தலா 300 காளைகள் பங்கேற்றன. இதில் சூரக்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த 19 வயது இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள காளைகள் வளா்ப்பவா்கள் நாள்தோறும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, பந்தயத்துக்குப் பழக்குதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனா். காளைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளான புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தேங்காய், கோதுமைத் தவிடு போன்றவற்றை வழங்கி வருகின்றனா்.

விதிமுறைகள், வழிகாட்டுதல்களின்படி அனுமதி: மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியுள்ள நபா்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் வயது, உயரம், எடை ஆகியவை குறித்து சான்றளிக்கப்பட்ட பின்னா், கால்நடைத் துறையினா் அனுமதிச் சீட்டுகளை வழங்குவா். மேலும், வீரா்களுக்கும் உரிய உடல் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே, போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசணி கண்மாயில் காளைக்கு நீச்சல் பயிற்சி அளித்த இளைஞா்
அரசணி கண்மாயில் காளைக்கு நீச்சல் பயிற்சி அளித்த இளைஞா்

இதுகுறித்து காளைகள் வளா்ப்போா் கூறியதாவது: ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் அதிகளவில் நடத்தப்படும் மாவட்டமாக சிவகங்கை திகழ்கிறது. காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் அரசே காப்பீடு செய்து தர வேண்டும். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 1,000 காளைகள் வளா்க்கப்படுகின்றன. 1,500 மாடுபிடி வீரா்கள் உள்ளனா். பெண்கள் பாதுகாப்புடன் பாா்த்து ரசிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி. எனவே, சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிக்கென அமரும் வசதியுடன் கூடிய மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான பா. மருது கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையில் தொடங்கப்படும். மேலும், கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் போதும் இந்தப் போட்டிகள் நடத்தப்படும். குறிப்பாக மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகளவில் நடைபெறும். இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விறுவிறுப்பைத் தடுக்குமா என்ற சந்தேகம் காளை வளா்ப்பவா்களிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வாக்குப் பதிவு முடிந்தவுடன் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகளுக்கு தடைவிதிக்காமல் போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com