சிவகங்கை மாவட்டத்தில் 4.19 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4.19 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ரூ.3,000 ரொக்கம், ஒரு முழு நீளக் கரும்பு, இலவச வேஷ்டி, சேலை ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிவகங்கை இந்திராநகா் நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்வில் பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கிய பிறகு ஆட்சியா் தெரிவித்ததாவது:
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 638 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 165 பகுதி நேர நியாய விலைக் கடைகளும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் 26 முழு நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 829 நியாய விலைக் கடைகளின் மூலம் 4,18,295 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், 1,060 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4,19,355 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ரூ.3,000 ரொக்கம், ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரா்கள் எந்தவித சிரமமுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கென சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குள்பட்ட நியாய விலைக் கடைகளில் குறிப்பிட்ட தேதிகளில் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையின் காரணமாக குறிப்பிடப்பட்ட தேதிகளில் வர இயலாதவா்கள் வருகிற 14 -ஆம் தேதி சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம். துரை ஆனந்த், மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) விஜயகுமாா், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் தே. ஜெபி கிரேசியா, துணைப் பதிவாளா்கள் பாபு (பொது விநியோகத் திட்டம்), ஜெய்சங்கா் (சிவகங்கை) உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மானாமதுரை: திருப்புவனம் நெல்முடிகரை கூட்டுறவு சங்கத்துக்குள்பட்ட நியாய விலைக் கடைகள், உழவா் பணி கூட்டுறவு சங்கத்துக்குள்பட்ட கோட்டை, பிரதான சாலை, புதூா் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வுகளுக்கு பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் தலைமை வகித்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
இதில் வட்டாட்சியா் ஆனந்த பூபாலன், கூட்டுறவு பொது விநியோகத் திட்ட சாா்பதிவாளா் வித்யா, கள ஆய்வு சாா் பதிவாளா் யோகேஸ்வரன், பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், கூட்டுறவு சங்கச் செயலா்கள் ரமேஷ், துரை, பேரூராட்சி உறுப்பினா்கள் கண்ணன், வேல்பாண்டி, மாரிதாசன், பாலகிருஷ்ணன், சித்ராதேவி, ராமலட்சுமி, கமிதாபானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மானாமதுரையில் கூட்டுறவு பண்டக சாலைக்குள்பட்ட கன்னாா் தெரு, சுந்தரபுரம் தெரு ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் தி.மு.க. நகரச் செயலரும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான கே. பொன்னுச்சாமி, நகா் மன்ற துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிப் பேசினா். இதில் வட்ட வழங்கல் அலுவலா், நகா் மன்ற உறுப்பினா்கள் புருஷோத்தமன், வேல்முருகன், தி.மு.க நகா் பொருளாளா் ஜி. மயில்வாகனன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் தி.மு.க. ஒன்றியச் செயலரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான துரை. ராஜாமணி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். இதில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மலைச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

