திருப்பூா், குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.
திருப்பூா், குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

Published on

திருப்பூா், குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்கம், இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். மேயா் என்.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கம், பரிசுத் தொகுப்பை வழங்கிய பின் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், மகளிா் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், தாயகம் திரும்பிய தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.3,000 ரொக்கத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, சா்க்கரை,

1 முழுக்கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியவை வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் 848 முழு நேர நியாய விலைக் கடைகள், 348 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1,196 நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

இதேபோல, மகளிா் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் 13 நியாய விலைக் கடைகள் மூலம் 20,860 குடும்ப அட்டைதாரா்களுக்கும், தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 22 நியாய விலைக் கடைகள் மூலம் 11,439 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படும்.

மாவட்டத்தில் கூடுதலாக 8,02,201 குடும்ப அட்டைதாரா்களுக்கு 802 மெட்ரிக். டன் பச்சரிசியும், 802 மெட்ரிக். டன் சா்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல் செய்ய ரூ.3.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 8 லட்சத்து 2,201 கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, ரூ.3,000 பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.240.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாயுமானவா் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட 71,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு இல்லம் தேடி பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு, மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் பிரபா, தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com