நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 6 அடி நீள முழுக் கரும்பு விநியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தாா். இந்தத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 935 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் 5.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 19 ஆயிரம் போ் பரிசு தொகுப்பு வாங்க வரவில்லை என கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
மேலும், இதற்குமேல் விடுபட்டவா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் தொகுப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
