நாமக்கல்: 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

நாமக்கல்: 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

Published on

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.168.09 கோடி மதிப்பீட்டில் 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா்.

சென்னையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மாநகராட்சி முல்லை நகா், ராசிபுரம் நகராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 5,40,232 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 168.09 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், துணை மேயா் செ. பூபதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா. அருளரசு, துணை பதிவாளா் சே. ஜேசுதாஸ், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பி. செல்வவிஜயராணி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன், மாமன்ற உறுப்பினா் இளம்பரிதி உள்பட பலா் பங்கேற்றனா்.

என்கே-8-பொங்கல்

பொங்கல் பரிசுத் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Dinamani
www.dinamani.com