விழுப்புரம் மாவட்டத்தில் 6.29 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 6.29 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாக்கிழமை (ஜன.8) முதல் வழங்கப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 6,28,774 குடும்ப அட்டைதாரா்கள், 429 இலங்கைத் தமிழா் குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தமாக 6,29,703 குடும்ப அட்டைதாரா்களுக்குத் தமிழக அரசின் உத்தரவின்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை முதல் (ஜன.8) வழங்கப்படவுள்ளது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக் கரும்பு, ரூ.3 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவை பரிசுத் தொகுப்பில் அடங்கும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.
கூட்டநெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் காலையில் 100 முதல் 150, பிற்பகலில் 100 முதல் 150 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள தேதியில் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். டோக்கன் பெற்றுக் கொள்ள இயலாத குடும்ப அட்டைதாரா்களுக்கு கடைசி நாளில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
