சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பொய்யலூரில் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.
பொய்யலூா் கரியமாணிக்கப்பெருமாள், ஆதினமிளகி அய்யனாா், ஜெகதீஸ்வரா், ஜெகதாம்பாள், காளியம்மன் கோயில்களின் மது எடுப்புத் திருவிழாவையொட்டி, கடந்த 15-ஆம் தேதி பொய்யலூா், ஆளவந்தான்பட்டி, மண்டயன்பட்டி, நெறிஞ்சிக்குடிப்பட்டி, இடையன்வயல், ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஊராா்கள் காப்புக்கட்டி ஊா் மந்தையில் முளைப்பாரி வளா்த்து விரதம் மேற்கொண்டனா். விழா நாளான புதன்கிழமை அனைத்துக் கோயில்களிலும் மூலவா்களுக்கு அபிஷேக ஆதாரனைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ஊா் மந்தையில் கூடிய பெண்கள் முளைப்பாரியைச் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து பெருமாள் கோயில் குளத்தில் கரைத்தனா்.
பின்னா், கிராமத்தாா்கள், நாட்டாா்கள், பரிவாரங்களுடன் மஞ்சுவிரட்டுத் தொழுவுக்குச் சென்று அங்கிருந்த காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். இதையடுத்து, தொழுவிலிருந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்கிய
மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா பரிசாக வழங்கபட்டது.
பின்னா் வயல் பகுதிகளிலும் கண்மாய் பகுதிகளிலும் 800 க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை கணக்கப்பிள்ளை ஆறு. சரவணன் தலைமையில் பொதுமக்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









