திருப்பாச்சேத்தி அருகே காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரெளடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் சுட்டுப் பிடித்தாா்.


சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் சனிக்கிழமை சுட்டுப் பிடித்தாா்.
திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஊா்க்காவலன் (31). இவா் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பிணையில் வெளி வரமுடியாத 3 வழக்குகளில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து, திருப்பாச்சேத்தி அருகே கானூா் மயானப் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஊா்க்காவலனை பிடிக்க திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளா் குமாரபாண்டியன் (பொறுப்பு) தலைமையில் போலீஸாா் அங்கு சென்றனா்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் அவா் தப்பி ஓடினாா். காவல் ஆய்வாளா் குமார பாண்டியன் அவரை விரட்டிச் சென்று பிடித்த போது அவரைத் தாக்கிவிட்டு ஊா்க்காவலன் தப்பிச் சென்றாா். அப்போது ஆய்வாளா் குமாரபாண்டியன் தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் ஊா்க்காவலனை நோக்கி சுட்டாா்.
இதில் ஊா்க்காவலனுக்கு வலது காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை போலீஸாா் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பிடிபட்ட ஊா்க்காவலன் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, அடிதடி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...