ஆண்டிபட்டி: மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுமா?

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோவில் மலைப் பகுதியில் வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென
Updated on
2 min read

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோவில் மலைப் பகுதியில் வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வேலப்பர் கோவில். இக் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. இக் கோவிலின் மூலவர் மாமரத்தின் அடியில் இருந்து மலைவாழ் மக்களால் எடுக்கப்பட்டதாலும் மற்றும் மாமரத்தின் வேரின் அடியில் இருந்து நீர் ஊற்று வற்றாமல் வந்து கொண்டிருப்பதாலும் இக் கோவிலில் அருள்பாலிக்கும் முருகனை மாவூற்று வேலப்பர் என அழைக்கின்றனர்.
 இந்த மாவூற்று வேலப்பருக்கு மலைவாழ் மக்களே பூஜைகளை பல நூறு ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். இவர்கள் பூஜை காலங்களில் மலையிலிருந்து இறங்கி வந்து பூஜை செய்துவிட்டு, பின்னர் மலையில் தங்கி தங்களது நிலத்தில் விவசாயம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் தினை மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை உண்டு வாழ்ந்து வந்தனர். விவசாயம் இல்லாத நாள்களில் மலைப் பகுதியில் விளையும் வள்ளிக் கிழங்கை எடுத்து உண்டு வந்தனர். மற்றும் தேனை எடுத்து பண்ட மாற்று முறை செய்து, அதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
 இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மலைப் பகுதியில் இவர்கள் விவசாயம் செய்துவந்த இடத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றும், மலைப் பகுதிக்குச் செல்லக் கூடாது என்று வனத் துறையினர் தெரிவித்தனராம்.
 இதனால் பல நூறு ஆண்டுகளாக மலைப் பகுதியில் சுற்றித் திரிந்த இவர்கள், மலை அடிவாரத்தில் குடிசைகள் அமைத்து தங்கி, வேலப்பர் கோவிலில் பூஜைகள் நடத்தி வந்தனர். இதன் மூலம் 30-க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்டோர் கோவிலுக்குவரும் பக்தர்கள் தரும் உணவுகளைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 பொதுமக்கள் கோவிலுக்கு வராத நாள்களில், தமிழக அரசின் விலையில்லா அரிசியைக் கொண்டு உண்டு வருகின்றனர். தற்போது விலையில்லா அரிசி இரண்டு மாதங்களாக வழங்காததால், குழந்தைகள் உணவுக்கு வழி இல்லாமல் தவித்து வருவதாக இவர்கள் கூறுகின்றனர்.
 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கு 10 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில் 10 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மற்ற குடும்பங்கள் பாறை இடுக்குகள் மற்றும் மலை அடிவாரங்களில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அரசின் விலையில்லா வேஷ்டி,சேலைகள் பற்றி எதுவும் தெரியாது என்று கூறும் இவர்கள், மாற்று துணிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
 இவர்களுக்காக இங்கு ஓர் ஆரம்பப் பள்ளி இயங்கி வருவதாகவும், இவர்களின் குழந்தைகள் இப் பள்ளியில் மட்டுமே படிப்பதாகவும், இவர்களில் யாரும் மேல்படிப்பு படிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இவர்களில் அதிகமாக படித்தவர் யார் என்று கேட்டால், சுந்தரம் என்பவர் மட்டும் ஆறாம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், இவர்தான் எங்கள் சமுதாயத்தில் அதிகம் படித்தவர் என்கிறார் சீனி.
 இதுகுறித்து வேலப்பர் கோவில் தலைமை பூசாரி அன்னகாமு கூறியது:
 நான் வேலப்பர் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறேன். எனக்கு வயது 106. எங்களுடையை மூதாதையர் காலத்தில் இருந்தே வேலப்பர் கோவிலுக்கு பூஜை செய்து வருகிறோம். நாங்கள் பல காலங்களாக மலையில் உள்ள 165 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, அதில் விளையும் பொருள்களை உணவாகப் பயன்படுத்தி வந்தோம். மற்றும் கோயிலுக்கு பூஜை செய்து வந்தோம்.
 பூஜைக்கு பின்னர் மலையில் உள்ள குடிசைக்குச் சென்று விடுவோம். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வனத் துறையினர் மலையில் இருந்து எங்களை வெளியேற்றி விட்டனர். இதனால் நாங்கள் இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி எங்கள் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எங்கள் குழந்தைகள் தங்க வீடுகளும், நாங்கள் உழைத்து உண்ண எங்கள் மூதாதையர் விவசாயம் செய்த பூமியும் தந்தால் நன்றாக இருக்கும் என்றார் அன்னகாமு பூசாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com