சின்னமனூர் அருகே மஞ்சள் நதிக்கண்மாய் தடுப்பணையில் விரிசல்: மழைநீரை  தேக்குவதில்  சிக்கல்

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்தில் எரசக்கநாயக்கனூர் மஞ்சள் நதிக்கண்மாயில் தடுப்பணையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைநீர்

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்தில் எரசக்கநாயக்கனூர் மஞ்சள் நதிக்கண்மாயில் தடுப்பணையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைநீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரசக்கநாயக்கனூரிலிருந்து  2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மரிகாட் (எ) மஞ்சள் நதிக்கண்மாய் 40 ஏக்கரில் உள்ளது. இக்கண்மாய் அருகேயுள்ள ஹைவேவிஸ் -மேகமலை பகுதியில் பெய்யும் மழை நீரானது ஓடைகள்விழியாக சென்று வீணாகி வந்தது. இதையடுத்து 2008-09 ஆம் நிதியாண்டில் ரூ. 2.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை கட்டப்பட்டது.  மேலும் மஞ்சள் நதிக் கண்மாய் நீர் தேங்கும் பகுதியை  சீரமைக்கும் பணிக்காக ரூ. 4.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல எரசக்கநாயக்கனூரிலிருந்து கண்மாய் அமைந்துள்ள பகுதி வரைக்கும் 2 கிலோ மீட்டர் நீளம் வரையில் ரூ. 40 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது.  
ஹைவேவிஸ் - மலைப்பகுதியில் ஆண்டுதோறும் 6 மாதம் நல்ல மழைப்பொழிவு இருக்கும். இதனால் மலைப்பகுதியிலிருந்து வரும் நீர் வரத்து ஓடைகள் வழியாக கண்மாயில் தேங்கும். இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீரானது சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் விவசாயப்பணிகள் நடைபெறவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பாக இருந்தது. 
இந்நிலையில் பெரியகுளம்  நீர்வள ஆதாரத்துறை மஞ்சாளறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கண்மாய் முறையாகப் பராரமிப்பு செய்யாத நிலையில் அணைக்கட்டுப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு மழை காலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேறி வருகிறது.
 அதன்படி கடந்த வாரம் பெய்த மழையால் கண்மாய் நிரம்பியது. ஆனால் தடுப்பணைச்சுவரில் இருந்த விரிசல் காரணமாக தண்ணீர் முழுவதும் வெளியேறியது.
இதுகுறித்து விவசாயி வெங்கட்ராமன் கூறுகையில், கண்மாய் முழுவதும் தண்ணீர் தேங்கி 5 ஆண்டுகளுக்கு மேலானது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி கண்மாய் நிரம்பியது. ஆனால் அணையை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் முழுவதும் வெளியேறியது.
 மேலும் கண்மாயை தூர்வாருவதாகக் கூறி அதிகப்படியான வண்டல் மண்ணை அள்ளியதாலும் தண்ணீர் பூமிக்குள் சென்றுவிட்டது. தற்போதும்  அணை அமைந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் அணையை முறையாகப் பராமரிப்பு செய்யாத காரணத்தால் கண்மாயில் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழைப்பொழிவு இல்லாத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்தாண்டு பெய்த மழை நீரை சேமிக்க முடியாத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தடுப்பணையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்து மழைநீர் தேக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com