மேகமலையில் விதிமீறும் சுற்றுலா முகமைகள்: வன விலங்குகள், காடுகளுக்கு பாதிப்பு

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் விதிமீறும் சுற்றுலா முகமைகளால் வன விலங்குகள், காடுகள் அழிந்து வருகின்றன.

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் விதிமீறும் சுற்றுலா முகமைகளால் வன விலங்குகள், காடுகள் அழிந்து வருகின்றன.
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதி 2,500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர்களில்  மேகக் கூட்டங்கள்  ஒன்றாக நகர்ந்து செல்வதாலே மேகமலை எனப் பெயர் பெற்றது. இந்த வனப் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான மலைக் குன்றுகளில் பெய்யும் மழைநீரே வைகை ஆற்றின் பிறப்பிடமாகும்.
தவிர, யானைகள், சிறுத்தைகள், புலிகள், மந்திக்குரங்குகள், மான்கள், சாம்பல் நிற அணில்கள் என பல வன விலங்குகள் வசிப்பிடமாகவும், பல்லுயிர் பெருக்கிடமாகவும் மேகமலை திகழ்கிறது. இதன் காரணமாகவே யுனஸ்கோ அமைப்பு இப்பகுதியை வன உயிரினக் கோட்டமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. 
அழிந்து வரும் வனம் மற்றும் உயிரினங்கள்: இங்கு 1500 முதல் 2000 மீட்டர்  உயரமான மலைத் தொடர்களில் 1000 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை உற்பத்தியாகிறது. சமீப காலமாக வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து விதிமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இவர்கள், அடர்ந்த வனப்பகுதியில் அத்துமீறி சென்று வனவிலங்குகளை வேட்டையாடுதல், மரங்களை வெட்டிக்கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், வனப்பகுதியானது அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
சில ஆண்டுகளுக்கு முன் கோடிக்கணக்கான மதிப்புள்ள பைசஸ், மழைப் பொழிவை ஏற்படுத்தக்கூடிய   ஏராளமான மரங்களை வெட்டி அழித்து விட்டனர். இதனால், ஆண்டுக்கு 8 மாதம் மழை பொழிவு இருந்த இப்பகுதியில் தற்போது மழைப் பொழிவு படிப்படியாக குறைந்து வருகிறது.
சட்ட விரோத தங்கும் விடுதிகள்: மேகமலை அடர்ந்த வனப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதுபோன்ற தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறும் மதுபாட்டில்கள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் வனம் செழுமை இழந்து வருகிறது. மேலும் வனவிலங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியது:
தேனி மாவட்டத்தின் ஒரே மலைப் பிரதேசம் மேகமலை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மலையின் வனப்பகுதிகளில் விதிமீறல்கள் நடைபெறுகின்றன. சில சுற்றுலா ஏஜென்ஸிகள் உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை இணையதளத்தில் பரப்பி, வனத்துறை அனுமதியின்றி வனவிலங்கள் நடமாட்டமுள்ள அடர்ந்து வனப்பகுதியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
எனவே, மேகமலையில் அனுமதியின்றி பாதுகாப்பு இல்லாமல் சட்ட விரோதமான முறையில் செயல்படும் தனியார்  தங்கும் விடுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, இயற்கை வளமான காடுகளை அழிவிலிருந்து காக்க அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து சின்னமனூர் வனச்சரகர் முருகன் கூறியது: மேகமலை வனப் பகுதியில் சின்னமனூர், கம்பம் மற்றும் வருஷநாடு ஆகிய மூன்று வனச்சரகங்கள் உள்ளன. இதில், சின்னமனூர் வனச் சரகத்தில் மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் கிளை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் விளம்பரங்கள் செய்து, வணிக நோக்கில் வந்து செல்வது தெரியவந்தது. 
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி செயல்படும்  தனியார் தங்கும் விடுதிகளை தொடர்ந்து கண்காணித்தும், வனப் பகுதியில் செல்ல எவ்வித அனுமதியும் கொடுப்பதில்லை. அவ்வாறு செயல்பட்டு வந்த 2  இடங்களை   வனத்துறை முடக்கி வைத்ததோடு, தொடர்ந்து வனப் பகுதியில் ரோந்து பணியும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
ஹைவேவிஸ் காவல் சார்பு-ஆய்வாளர் தனிக்கொடி கூறுகையில், இங்கு, 5-க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் சட்டத்துக்கு விரோதமான முறையில் இயங்கி வருவதால், சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். ஆனால், 5 மாதங்களாகியும் இதுவரையில் யாரும் அது சம்பந்தமாக முறையான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. 
எனவே,  இந்த விடுதிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட  நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com