சின்னமனூர் அருகே மேகமலை அடிவாரத்தில் கொள்ளைபோகும் கனிம வளங்கள்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேகமலை அடிவாரத்திலுள்ள குளங்கள், ஓடைகளில் கனிம வளங்கள்
Updated on
1 min read

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேகமலை அடிவாரத்திலுள்ள குளங்கள், ஓடைகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என, விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேகமலை,பெருமாள்மலை வனப் பகுதியில் 100-க்கும்  மேற்பட்ட ஓடைகள் உள்ளன. வனப் பகுதியில் பெய்யும் மழை நீர்  ஓடைகள் வழியாகச் சென்று, எரசக்கநாயக்கனூர், வெள்ளையம்மாள்புரம், சின்னஓவுலாபுரம், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் என சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள கண்மாய்களில் சேரும்.
எரசக்கநாயக்கனூர் மரிகாட் கண்மாய் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் தேங்கும் தண்ணீர் மூலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, சுற்றியுள்ள கன்னிச்சேர்வைபட்டி, அப்பிபட்டி உள்ளிட்ட 15 கிராமங்களின்   குடிநீர்த் தேவையும் பூர்த்தியாகிறது. 
இதேபோல், சித்திரை கோனார் கண்மாய் உள்ளிட்ட பிற பகுதிகளிலுள்ள 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய நீராதாரமாக உள்ளன. 
கனிம வளங்கள் கொள்ளை: மேகமலை மற்றும் பெருமாள் மலை  வனப் பகுதியில் ஆண்டுக்கு 6 மாதம் கனமழை பெய்யும். இந்த மழை நீரானது ஓடைகள் வழியாகச் சென்று கண்மாய்களில் தேங்கி விவசாயம் செழித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்ததால், ஓடைகளில் நீர்வரத்தின்றி வறண்டு  விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும்,  ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குளத்தின் கரையை உடைத்து பாதை  அமைப்பு: எரசக்கநாயக்கனூர் சித்தரை கோனார் குளத்தின் ஒரு பகுதியின் கரையை சேதப்படுத்தி, அவ்வழியே டிராக்டர், டிப்பர் லாரிகள் சென்றுவரும் வகையில் குளத்தின் நடுவே பாதை அமைத்துள்ளனர். இந்தப் பாதை வழியாக அங்குள்ள பெரிய மற்றும் சின்ன ஓடைகளில் குவிந்து கிடக்கும் மணல் மற்றும் கரம்பை மண் பல  மாதங்களாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் மேலும் கூறியதாவது: மேகமலை வனப் பகுதியில் பெய்யும் மழை நீரால், சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெற்று,  குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது. இங்குள்ள கண்மாய்களில் தேங்கும் மழை நீரால் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்பெற்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமாக கனிம வளங்கள் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து வருவாய் துறையினரிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நிரந்தர நடவடிக்கையும் இல்லை. 
எனவே, எரசக்கநாயக்கனூர் மலை அடிவாரம், பெருமாள் மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com