தேனி மாவட்டம், மேகமலை வன உயிரினச் சரணாலயத்தை புலிகள் சரணாலயமாகவும், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள வனப் பகுதியை யானைகள் சரணாலயமாகவும் மாற்ற, வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிரினச் சரணாலயம் 626 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அடர்ந்த வனப் பகுதியாகவும், அருகே கேரள மாநிலம் பெரியாறு புலிகள் சரணாலயமும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும் தொடர்ச்சியாக அமைந்துள்ளன.
புலிகள் சரணாலயம்: கம்பம் கிழக்கு மற்றும் கூடலூர் வனச்சரகப் பகுதிகளான சுருளியாறு மின்சார நிலையம் மற்றும் மங்கலதேவி தில்லக்குடி வனப்பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கண்காணிப்பு கேமரா மற்றும் கால் தடங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், குள்ளப்பகவுண்டன்பட்டி சுருளியாறு மின்சார நிலைய சாலையில் முடநாரி என்னுமிடத்தில் சோதனைச் சாவடி மற்றும் லோயர்-கேம்ப் சுருளியாறு மின்சார நிலையம் சாலையில் நாராயணன் தொழு என்னுமிடத்திலும் சோதனைச் சாவடியை அமைத்து, பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு வனத் த துறையினர் தடை விதித்துள்ளனர்.
இப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மேகமலை வன உயிரினச் சரணாலயத்தை புலிகள் சரணாலயமாக மாற்ற மாவட்ட வனக் காப்பாளர் அலுவலகம், தலைமை வனப் பாதுகாப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, மேகமலை வன உயிரினச் சரணாலயம் விரைவில் புலிகள் சரணாலயமாக மாற்றப்பட உள்ளது என, வனச் சரகர் ஒருவர் தெரிவித்தார்.
யானைகள் சரணாலயம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் அடிக்கடி யானை-மனிதன் இடையேயான மோதலில் மனித உயிர் இழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இந்த இழப்புகளை தவிர்க்கவும், தடுக்கவும், யானைகளைப் பாதுகாக்கவும், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ஆனையிரங்கல் - சின்னக்கானல் வனப் பகுதியை யானைகள் சரணாலயமாக மாற்ற கேரள வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2010 இல் மூணாறு பகுதியில் 28 பேரும், கடந்த 2018 இல் 4 பேரும் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் நரேந்திரபாபு, முதன்மை வனப் பாதுகாப்பாளருக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், யானைகளின் தாக்குதலில் இருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற, மூணாறு அருகே உள்ள சின்னக்குண்டம், 301 காலனி மற்றும் 80 ஏக்கர் ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களை அங்கிருந்து இடம் மாற்றி, அந்த இடங்களை யானைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, கேரள அரசு கடந்த டிசம்பர் மாதம் இப்பகுதிகளில் வாழும் குடும்பங்களின் இடமாற்றத்துக்காக ரூ.49.70 கோடியை ஒதுக்கி, தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளது.
ஆனையிரங்கல் பகுதியில் உள்ள 386 ஹெக்டேர் பரப்பளவு வனப் பகுதியை ஹிந்துஸ்தான் நியூஸ் பிரின்ட் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதுவும், யானைகள் சரணாலயப் பகுதிக்குள் வருகிறது. கூடுதலாக 290 ஹெக்டேர் நிலமும் பயன்படுத்தப்பட உள்ளதாக, வனத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இங்கு அமையும் யானைகள் வனச் சரணாலயத்தால், யானைகளின் பழக்கவழக்கம், நடைபாதை மாறாமலும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமலும், யானைகளின் இயல்பான வாழ்வுக்கு ஏற்ற இடமாகவும் மாறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.